Monday, June 11, 2007

சௌதி அரேபியாவில் நான்!!

நான் எங்கள் வீட்டில் ஒரே பையன். எனக்கு நான்கு மூத்த சகோதரிகள் உள்ளனர். நான் ஒரே பிள்ளையாதலால் மிகவும் செல்லப்பிள்ளை. வீட்டில் ஒரு வேலை கூட செய்ய மாட்டேன். எல்லா வீட்டு வேலையும் சரி வெளி வேலையும் சரி என் சகோதரிகள் பார்த்துக்கொள்வார்கள். சிலர் சொல்வார்கள் உங்கள் வீட்டில் நான்கு பையன்கள் ஒரே பெண் என்று.

பின்னர் நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கணிப்பொறியியல் பயின்று நல்ல மதிப்பென் பெற்று தேர்ச்சி பெற்றுவிட்டேன் (உண்மையாகவே நல்ல மதிப்பென் தான் என்னை அப்படி பார்க்க வேண்டாம்). அப்பொழுது 911 சம்பவம் நடந்த சமயம், ஐ.டி. பீல்டு ரெம்ப சரிவடைந்து கிடந்தது. எனக்கு இந்தியாவில் நல்ல வேலை கிடைக்கவில்லை. வீட்டில் என்ன செய்வார்கள் - எனது மூத்த சகோதரியின் கணவர், அதாவது என் மூத்த மாமா சௌதி அரேபியாவில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் சொல்லி எனக்கு அங்கு வேலைக்கு விசா எடுக்கும் படி சொல்லி என்னை சௌதிக்கு அனுப்பிவிட்டார்கள்.

ஆயிரம் வண்ணக் கணவுகளுடன் நான் சௌதி அரேபியா வந்துவிட்டேன். நம்மில் பலர் வெளிநாடு என்றால் பெரிய பெரிய கட்டடங்கள், சுத்தமான சாலைகள் என்றுதான் கற்பனை காண்கிறோம், திரைப்படத்திலும் காண்கிறோம். ஆனால் இங்கு நான் கண்டது எதிர்மறை. விமானநிலையத்திலிருந்து ஊருக்குள் செல்லும் வழியில் இரண்டு புறமும் ஒரே மணல், வெறும் மணல் மேடு. நம்மூரில் பொட்டைக்காடு என்று சொல்வோமே அதைப்போல இருந்தது. சௌதியின் தலைநகரமான ரியாதில் தான் என் மாமா இருக்கிறார். நானும் அங்குதான் சென்றேன். சென்ற ஒரு ஆறு மாதங்களில் வேலைக்கிடைத்துவிட்டது. நல்ல சம்பளம்.

ஆனால் ஒரு அதிர்ச்சியான செய்தி - இங்கு பெண்கள் வேலைப் பார்க்க கூடாது, அதாவது ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்யத் தடை. பெண்களுக்குத் தனி அலுவலகத்தில் வேலை ஆண்களுக்குத் தனி அலுவலகத்தில் வேலை. அதுமட்டுமல்ல பெண்கள் சாலையில் நடமாடும்போது அபயா என்று இங்கு அழைக்கப்படும் (நம்மூரில் பர்தா என்பார்கள்) துணியை இட்டு முகத்தை மூடிக்கொண்டு தான் செல்ல வேண்டும். ஐயகோ!! பிறந்ததிலிருந்தே பெண்கள் (என் அம்மா, என் சகோதரிகள், என் பாட்டி, என் சிற்றன்னைகள்) முகத்தைப் பார்த்து வளர்ந்த எனக்கு இந்த நிலைமையா!!

சரி அது போகட்டும். நான் வாரமொருமுறை வீட்டிற்கு கணிப்பொறி வெப்காமரா மூலம் வீடியோ கான்பஃரன்சிங்கு செய்வேன், அப்போது ஆசைத்தீர என் அம்மா என் சகோதரிகள் முகத்தைப் பார்த்துக்கொள்வேன்.

இங்கு பல தமிழ் உணவகங்கள் உள்ளன. நான் ஒரு நாள் ஒரு உணவகம் சென்று, சரி நம்மூர் ஆற்காடு பிரியாணி சாப்பிட்டு எத்தனை நாட்களாகிறது என்று நினைத்து ஒரு சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணினேன். உடனே ஒரு பிலேட் நிறைய பிரியாணி என்ற பெயரில் எதோ உப்பு காரம் இல்லாமல், பத்திய பிரியாணி எடுத்து வந்தான் (அதாவது இங்கு வாழும் மக்களது பாரம்பரிய உணவு கப்சா எனப்படும் ஒரு வகை பத்திய பிரியாணி. அதில் எண்ணேய் மட்டும் தான் இருக்கும். இங்கு எல்லாக் கடைகளிலும் பிரியாணி கப்சா போல தான் இருக்கும்). என்ன செய்ய ஆர்டர் பண்ணிய காரணத்தால் வேறு வழியில்லாமல் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.

மற்றொரு நாள் காலையில் காலை உணவுக்காக வேறொரு தமிழ் உணவகம் சென்றேன். அவ்வுணவகம் இங்குள்ள தலைச்சிறந்த உணவகங்களில் ஒன்றாகும். அங்கு சென்று தமிழர்களின் வாடிக்கையான காலை உணவான இட்லி ஆர்டர் செய்தேன். உடனே அவர்கள் இட்லி என்ற பெயரில் நான்கு சுண்ணாம்பு கற்களை கொண்டு வைத்தார்கள். தலைசிறந்த உணவகத்திலேயே இந்த கதி என்றால் சாதாரண உணவகத்தில்??

ம்ம்ம்.. என் அன்னையின் இட்லி மல்லிகைபூ போன்று மிகவும் மிருதுவாக இருக்கும். பக்கத்துக் கடை ஆற்காடு சிக்கன் பிரியாணி (சிக்கனமான பிரியாணி கூட) எவ்வளவு சுவையாக நறுமணமாக (பிரியாணி செய்தவுடன் அந்த தெருவே மணக்கும்) இருக்கும். எந்த பிறவியில் என்ன பாவம் செய்தேனோ இங்கு இப்படியெல்லாம் பணத்திற்காக கஷ்டப்பட வேண்டியுள்ளது...

5 comments:

Unknown said...

என்ன பண்றது.ஒன்ன இழந்தாத்தா ஒன்னு கிடைக்கும்.ரொம்ப பாசக்காரப்பய புள்ளயாட்ட இருக்குது.நல்லா இருப்பா

Unknown said...

என்ன செந்தில், ரொம்ப ஃபீலிங்ல இருக்கிங்க போல :-).

Senthil Alagu Perumal said...

அன்புள்ள தாமோதர் அண்ணா, தங்கள் குறிப்புக்கு நன்றி. ஆனா நான் வாழ்க்கையையே இழந்துட்டேண்ணா!!

Senthil Alagu Perumal said...

ஆமா kvr பிரதர் ரெம்ப feel பண்ணியாதால் தான் எழுதிவிட்டேன்.

Rajesh said...

machi ,

all in the game

take care
bye
M.Rajesh