Sunday, June 17, 2007

தந்தையர் தினம் !!

இன்று தந்தையர் தினம். எத்தனை பேருக்கு இது தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் காதலர் தினம் எத்தனை பேருக்கு தெரியாது என்று எனக்கு உறுதியாகத் தெரியும். சிலர் சொல்லுவார்கள் தந்தையர் தினம் மேற்கத்தியருக்குத்தான் அதை ஏன் நாம் கொண்டாட வேண்டும் என்று. அப்படிப் பார்த்தால் காதலர் தினமும் மேற்கத்தியருக்காகத்தான் அதை நாம் கொண்டாடும் போது இதையும் கொண்டாடத்தான் வேண்டும்.

தந்தை என்பவர் நமக்கு உயிர் கொடுத்தவர். மக்களுக்கும் விலங்கினத்திற்கும் உயிர் கொடுத்தவர் கடவுள் என்றால், நம் தந்தையும் நமக்கு கடவுள் தான். இப்பொழுது எத்தனை பேர் தன் தந்தையை மதிக்கிறார்கள்? "போங்க‌ப்பா உங்களுக்கு ஒன்னும் தெரியாது!!" இதைத்தான் நாம் சொல்கிறோம். "அவர் பழைய Generation ஆள்" என்றுதான் சொல்கிறோம். அவர் நமக்காகவும் நம் குடும்பத்திலுள்ள ஏனையோருக்காகவும் எவ்வளவு பாடுபடுகிறார் என்று உணர்கிறோமா? சேரன் தனது "தவமாய் தவமிருந்து" படம் மூலம் ஒரு தந்தை படும் பாட்டை மிக அழகாகவும் அருமையாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். பண்டிகை நாட்களில் தனக்கு கூட புதிய ஆடை எடுக்காமல் தன் குழந்தைகளுக்கு கேட்கும் ஆடையை எடுத்துத் தருகிறாரே, அப்போதாவது அவர் நமக்காக செய்யும் தியாகத்தை நாம் உணர்கிறோமா?

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். "

என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க நாம் இனியாவது செயல்பட்டு, தன் த‌ந்தையின் முதிய காலத்தில் அவர் மனம் நோகாமல் அவரை நன்கு கவனித்துக்கொள்வோம் என்று இந்த‌ ந‌ன்னாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக‌!!

No comments: