"தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!!"
சரி அதற்காக ஹிந்தி போன்ற வட மொழிகளை நாம் எதிர்க்கலாமா? தமிழ் மீது அளவிலாப் பற்று வைத்திருந்த பாரதியாருக்கே பல மொழிகள் தெரியுமாம். எனவே தான்
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போன்று இனிமையானது எங்கும் காணோம்"
என்றார். சிலர் ஹிந்தியை எதிர்த்தால் தான் தமிழை வளர்க்க முடியும் என்பார் தன் சுய நலத்துக்காக. ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு அவரது குழந்தைகளையோ சேர்ப்பது ஹிந்தி சொல்லித்தரப்படும் சென்டிரல் போர்டு பள்ளியில்!! அது மிகவும் தவறான சிந்தனை.
இப்போது ஆங்கிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது எப்படி வளர்கிறது? வேறு மொழிகளை வளர்ப்பதால் தான் வளர்கிறது.. ஆம் வருடா வருடம் வேறு மொழிச் சொற்களை ஆங்கிலத்தில் இணைப்பார்கள். உதாரணமாக சமஸ்கிருத வார்த்தையான "குரு" (ஆசிரியரைக் குறிப்பது) இப்போது ஆங்கில வார்த்தை.
நாமும் தமிழை வளர்க்க வேண்டுமேயானால் வேறு மொழிகளை கற்க வேண்டும். அப்போது தான் தமிழ் மொழியின் சுவையை முழுமையாக நாம் உணரமுடியும். எப்படி ஹோட்டல் உணவை உட்கொண்டால் வீட்டு உணவின் அருமை புரியுமோ அப்படி!! நாம் அவ்வாறு வேறு மொழிகளைக் கற்கவில்லையானால் அதன் விளைவு தமிழர்களாகிய நமக்கு தான். இப்போது பாருங்கள் தமிழ் நாட்டை தாண்டினாலே தமிழர்கள் ஹிந்தி தெரியாமல் பெரும் அவதிப்படுகின்றனர்.
சீனர்கள் மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பினும் ஏன் அவர்களால் நமக்கு ஈடாக கணிப்பொறி மென்துறையில் பணி புரிய முடியவில்லை? காரணம் மொழி. அவர்களுக்கு ஆங்கிலம் நம்மைப் போல சரளமாக பேச முடியாது. அவர்களது நிலை நமக்கும் வரக்கூடாது. எனவே இன்றே வாருங்கள் நண்பர்களே நாம் வேறு மொழிகளையும் கற்போம்!! தமிழ் மொழியையும் வளர்ப்போம்!!