Monday, June 18, 2007

மக்களை முன்னேற்றுவதே மதம் என்பது...

சமயம், மதம் என்பது என்ன? முந்தைய கால மனிதன் ஒரு நெறி இல்லாமல் நெறி கெட்டு தறி கெட்டு சென்று கொண்டிருந்தான். அவனை ஒரு நெறிக்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே மதம் என்னும் ஒரு நெறி நம் முன்னோர்களால் கொண்டுவரப்பட்டது. மதம் ஒருப் போதும் மக்கள் முன்னேற்றத்தை தடுப்பதாகாது.

பிற்காலத்தில் மன்னர்களும் அரசியல்வாதிகளும் ஏற்படுத்தியதுதான் சாதியாகும். ஒரு மதத்தை உண்மையாக பின்பற்றுபவன் ஒருக்காலும் தீய செயலை செய்ய மாட்டான். நான் இங்கு எந்த மதத்தையும் குறிப்பிட்டு கூறவில்லை. உண்மை என்னவெனில் அனைத்து மதமும் ஒன்றே. அனைத்து மதமும் ஓரே கருத்தைத் தான் சொல்லும். வெவ்வேறு மதங்கள் பிற்காலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது. ஒருவரிடம் சென்று "டேய் அதைச் செய்யாதே" என்றால் அதைத்தான் செய்வான். அதே ஆளிடம் சென்று "டேய் அதைச் செய்தால் நரகத்திற்கு சென்று விடுவாய்" என்றால் பயந்து கொண்டு செய்ய மாட்டான்.

நான் பெரியார் கூறியது தவறு என்று சொல்லவில்லை. அவர் சாதியின் வேரை அறுக்கவே மதம் வேண்டாம் என்றார். வெறும் சாதி இல்லை என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே தான் அவர் சாதியின் வேரான மதமே இல்லை என்றார்.

மற்றபடி பெண்ணடிமைத்தனம், தீண்டாமை போன்றவை காலப்போக்கில் மதத்திற்குள் திணிக்கப்பட்டது. எந்த ஒரு மதமும் அவற்றை ஒருப்போதும் ஆமோதிக்காது.

Sunday, June 17, 2007

தந்தையர் தினம் !!

இன்று தந்தையர் தினம். எத்தனை பேருக்கு இது தெரியும் என்று எனக்கு தெரியாது. ஆனால் காதலர் தினம் எத்தனை பேருக்கு தெரியாது என்று எனக்கு உறுதியாகத் தெரியும். சிலர் சொல்லுவார்கள் தந்தையர் தினம் மேற்கத்தியருக்குத்தான் அதை ஏன் நாம் கொண்டாட வேண்டும் என்று. அப்படிப் பார்த்தால் காதலர் தினமும் மேற்கத்தியருக்காகத்தான் அதை நாம் கொண்டாடும் போது இதையும் கொண்டாடத்தான் வேண்டும்.

தந்தை என்பவர் நமக்கு உயிர் கொடுத்தவர். மக்களுக்கும் விலங்கினத்திற்கும் உயிர் கொடுத்தவர் கடவுள் என்றால், நம் தந்தையும் நமக்கு கடவுள் தான். இப்பொழுது எத்தனை பேர் தன் தந்தையை மதிக்கிறார்கள்? "போங்க‌ப்பா உங்களுக்கு ஒன்னும் தெரியாது!!" இதைத்தான் நாம் சொல்கிறோம். "அவர் பழைய Generation ஆள்" என்றுதான் சொல்கிறோம். அவர் நமக்காகவும் நம் குடும்பத்திலுள்ள ஏனையோருக்காகவும் எவ்வளவு பாடுபடுகிறார் என்று உணர்கிறோமா? சேரன் தனது "தவமாய் தவமிருந்து" படம் மூலம் ஒரு தந்தை படும் பாட்டை மிக அழகாகவும் அருமையாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். பண்டிகை நாட்களில் தனக்கு கூட புதிய ஆடை எடுக்காமல் தன் குழந்தைகளுக்கு கேட்கும் ஆடையை எடுத்துத் தருகிறாரே, அப்போதாவது அவர் நமக்காக செய்யும் தியாகத்தை நாம் உணர்கிறோமா?

"மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். "

என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க நாம் இனியாவது செயல்பட்டு, தன் த‌ந்தையின் முதிய காலத்தில் அவர் மனம் நோகாமல் அவரை நன்கு கவனித்துக்கொள்வோம் என்று இந்த‌ ந‌ன்னாளில் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக‌!!

சினிமா சொல்லும் கலாச்சாரம் !!

சமீபத்தில் வெளி வந்த படங்களில் எது நல்ல படம் என்று என் நண்பனிடம் கேட்டேன். அதற்கு அவன் "மச்சி உன்னாலே உன்னாலே செம படம் மச்சி, நல்ல கதை நல்ல பாடல்கள் நல்ல நடிப்பு" என்று சொன்னான். அவன் சொன்னது என் மனதில் முள் போல குத்தியது.

அதில் ஒரு காட்சி வரும். இராசு சுந்தரம், வினை (கதாநாயகன்) மற்றும் சதா காரில் செல்வார்கள். அப்போது இராசு சுந்தரத்திற்கு தன் கைத்தொலைபேசியில் ஒரு கால் வரும். அதாவது ஒருவன் ஒரு பெண்ணை அவர்களுக்கு அனுப்பியதாகவும், அப்பெண்ணுடன் நம் கதாநாயகன் வினை "Full Night Full Tight" என்று இராசு சுந்தரம் சொல்வார். உடனே சதா கோபித்துக் கொண்டு காரைவிட்டு கீழே இறங்கி விடுவாள். நம் கதாநாயகன் சொல்வார் புரிந்து கொள் என்று. ஏதோ அவர் ஒன்றும் செய்யவில்லை, சதா தான் தவறாக நினைத்துக் கொண்டாள் என்றும் அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும். இப்படி ஈனச் செயலை செய்யும் இவன் கதைக்கு நாயகனாம்?

முன்பு வந்த படங்களில் கதையின் நாயகன் ஒரு உத்தமராய் இருப்பார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிப்பார். ஆனால் இப்போது உள்ள காதாநாயகன் திருமணத்திற்கு முன்பு தகாத உறவுகளை வைத்துக் கொள்கிறார். இதை கதாநாயகி புரிந்து கொள்ள வேண்டுமாம், இது தவறில்லையாம். இதை பார்க்கும் இளைய சமூகத்தினர் என்ன செய்வார்கள் சிந்தியுங்கள்...

இப்படிப்பட்ட திரைப்படத்தை எப்படி நமது சென்சார் வெளியிடுகிறார்கள் என்று புரியவில்லை. இப்படிப்பட்ட படம் நல்ல படம் என்ற பெயரையும் பெற்றுவிடுகிறது. இதனால்தான் நம் நாட்டில் Dating மிகுந்துள்ளது. நம் கலாச்சாரம் அழிந்து கொண்டு வருகிறது.

Tuesday, June 12, 2007

மிஸ் யூனிவர்ஸ்!!


மிஸ் இந்தியா, மிஸ் யூனிவர்ஸ், மிஸ் வேல்டு, மிஸ் ஏசியா பசிபிக்... அப்பப்பா! ஆணின் காம பசிக்குத்தான் எத்தனை விருந்துகள்!! இவை அனைத்தும் உண்மையாகவே தேவைதானா? இவை எத்தனை ஏழை குடும்பங்களை காக்கிறது? எத்தனை பசியால் துடிப்பவர்களுக்கு உணவளிக்கிறது? இவை உண்மையாகவே தேவைதானா?

ஏன் கலாச்சாரத்திற்கு பேர்போன நம் இந்தியாவும் இதில் பங்கேற்கிறது? நம் பெண்கள் அடக்கத்திற்கும் அமைதிக்கும் பேர் போனவர்கள். இருந்தும் ஏன் அவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்? காரணம்... பணம்!!! வென்றுவிட்டால் கிடைப்பது கொஞ்ச நஞ்சமா? கோடிக்கணக்கிலள்ளவா கிடைக்கும்!!

சரி பணத்திற்காக நம் கலாச்சாரத்தை விற்பது நியாயம் தானா சற்று யோசியுங்கள்!!!

Monday, June 11, 2007

சௌதி அரேபியாவில் நான்!!

நான் எங்கள் வீட்டில் ஒரே பையன். எனக்கு நான்கு மூத்த சகோதரிகள் உள்ளனர். நான் ஒரே பிள்ளையாதலால் மிகவும் செல்லப்பிள்ளை. வீட்டில் ஒரு வேலை கூட செய்ய மாட்டேன். எல்லா வீட்டு வேலையும் சரி வெளி வேலையும் சரி என் சகோதரிகள் பார்த்துக்கொள்வார்கள். சிலர் சொல்வார்கள் உங்கள் வீட்டில் நான்கு பையன்கள் ஒரே பெண் என்று.

பின்னர் நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கணிப்பொறியியல் பயின்று நல்ல மதிப்பென் பெற்று தேர்ச்சி பெற்றுவிட்டேன் (உண்மையாகவே நல்ல மதிப்பென் தான் என்னை அப்படி பார்க்க வேண்டாம்). அப்பொழுது 911 சம்பவம் நடந்த சமயம், ஐ.டி. பீல்டு ரெம்ப சரிவடைந்து கிடந்தது. எனக்கு இந்தியாவில் நல்ல வேலை கிடைக்கவில்லை. வீட்டில் என்ன செய்வார்கள் - எனது மூத்த சகோதரியின் கணவர், அதாவது என் மூத்த மாமா சௌதி அரேபியாவில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் சொல்லி எனக்கு அங்கு வேலைக்கு விசா எடுக்கும் படி சொல்லி என்னை சௌதிக்கு அனுப்பிவிட்டார்கள்.

ஆயிரம் வண்ணக் கணவுகளுடன் நான் சௌதி அரேபியா வந்துவிட்டேன். நம்மில் பலர் வெளிநாடு என்றால் பெரிய பெரிய கட்டடங்கள், சுத்தமான சாலைகள் என்றுதான் கற்பனை காண்கிறோம், திரைப்படத்திலும் காண்கிறோம். ஆனால் இங்கு நான் கண்டது எதிர்மறை. விமானநிலையத்திலிருந்து ஊருக்குள் செல்லும் வழியில் இரண்டு புறமும் ஒரே மணல், வெறும் மணல் மேடு. நம்மூரில் பொட்டைக்காடு என்று சொல்வோமே அதைப்போல இருந்தது. சௌதியின் தலைநகரமான ரியாதில் தான் என் மாமா இருக்கிறார். நானும் அங்குதான் சென்றேன். சென்ற ஒரு ஆறு மாதங்களில் வேலைக்கிடைத்துவிட்டது. நல்ல சம்பளம்.

ஆனால் ஒரு அதிர்ச்சியான செய்தி - இங்கு பெண்கள் வேலைப் பார்க்க கூடாது, அதாவது ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்யத் தடை. பெண்களுக்குத் தனி அலுவலகத்தில் வேலை ஆண்களுக்குத் தனி அலுவலகத்தில் வேலை. அதுமட்டுமல்ல பெண்கள் சாலையில் நடமாடும்போது அபயா என்று இங்கு அழைக்கப்படும் (நம்மூரில் பர்தா என்பார்கள்) துணியை இட்டு முகத்தை மூடிக்கொண்டு தான் செல்ல வேண்டும். ஐயகோ!! பிறந்ததிலிருந்தே பெண்கள் (என் அம்மா, என் சகோதரிகள், என் பாட்டி, என் சிற்றன்னைகள்) முகத்தைப் பார்த்து வளர்ந்த எனக்கு இந்த நிலைமையா!!

சரி அது போகட்டும். நான் வாரமொருமுறை வீட்டிற்கு கணிப்பொறி வெப்காமரா மூலம் வீடியோ கான்பஃரன்சிங்கு செய்வேன், அப்போது ஆசைத்தீர என் அம்மா என் சகோதரிகள் முகத்தைப் பார்த்துக்கொள்வேன்.

இங்கு பல தமிழ் உணவகங்கள் உள்ளன. நான் ஒரு நாள் ஒரு உணவகம் சென்று, சரி நம்மூர் ஆற்காடு பிரியாணி சாப்பிட்டு எத்தனை நாட்களாகிறது என்று நினைத்து ஒரு சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணினேன். உடனே ஒரு பிலேட் நிறைய பிரியாணி என்ற பெயரில் எதோ உப்பு காரம் இல்லாமல், பத்திய பிரியாணி எடுத்து வந்தான் (அதாவது இங்கு வாழும் மக்களது பாரம்பரிய உணவு கப்சா எனப்படும் ஒரு வகை பத்திய பிரியாணி. அதில் எண்ணேய் மட்டும் தான் இருக்கும். இங்கு எல்லாக் கடைகளிலும் பிரியாணி கப்சா போல தான் இருக்கும்). என்ன செய்ய ஆர்டர் பண்ணிய காரணத்தால் வேறு வழியில்லாமல் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.

மற்றொரு நாள் காலையில் காலை உணவுக்காக வேறொரு தமிழ் உணவகம் சென்றேன். அவ்வுணவகம் இங்குள்ள தலைச்சிறந்த உணவகங்களில் ஒன்றாகும். அங்கு சென்று தமிழர்களின் வாடிக்கையான காலை உணவான இட்லி ஆர்டர் செய்தேன். உடனே அவர்கள் இட்லி என்ற பெயரில் நான்கு சுண்ணாம்பு கற்களை கொண்டு வைத்தார்கள். தலைசிறந்த உணவகத்திலேயே இந்த கதி என்றால் சாதாரண உணவகத்தில்??

ம்ம்ம்.. என் அன்னையின் இட்லி மல்லிகைபூ போன்று மிகவும் மிருதுவாக இருக்கும். பக்கத்துக் கடை ஆற்காடு சிக்கன் பிரியாணி (சிக்கனமான பிரியாணி கூட) எவ்வளவு சுவையாக நறுமணமாக (பிரியாணி செய்தவுடன் அந்த தெருவே மணக்கும்) இருக்கும். எந்த பிறவியில் என்ன பாவம் செய்தேனோ இங்கு இப்படியெல்லாம் பணத்திற்காக கஷ்டப்பட வேண்டியுள்ளது...