வளைகுடா நாடுகளில் பல பார்கள் இருப்பதும் அங்கு நம் நாட்டு நர்த்தகிகள் விசிட் விசாவில் வந்து நாட்டியம் ஆடுவதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இங்கு அவர்கள் படும் அவதியும் அவர்கள் படும் பாடும் எத்தனை பேருக்கு தெரியும்?
அவர்களும் மனிதர்கள் தான்!!
பார் டான்ஸர்களின் நிலைமை இங்கு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அனைவரையும் ஆடு மாடு போன்று ஒரே இடத்தில் அடைத்து வைத்து பின் மேய்ப்பானைப் போன்று செக்யூரிட்டி என்ற பெயரில் ஒருவன் வந்து அவர்கள் அனைவரையும் இருப்பிடத்திலிருந்து நாட்டியமாடும் இடத்திற்கு அழைத்துச் செல்வது மிகவும் கொடுமையான ஒரு செயல். அதற்கு ஏஜன்டுகளும் ஓட்டல் நிர்வாகிகளும் தரும் பதில் பாதுகாப்பு!!
இங்கு வந்தபின் எனக்கு சில பார் டான்ஸர்களின் நட்பு கிடைத்தது அவர்களிடமிருந்து இவைப் போன்று பல கொடுமையான விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.
வேலை நேரம்
அவர்களின் வேலை இரவு 9 மணிக்கு துவங்குகிறது. விடியற்காலை 3 மணிக்கு முடிகிறது. பின் 4 மணிக்கு வண்டி வரும். 4½ அல்லது 4¾ மணிக்கு வீடு திரும்பி 5½ அல்லது 6 மணிக்கு சாப்பிட்டுவிட்டு தூங்குவார்கள். பின் நற்பகல் 3 அல்லது 4 மணிக்கு எழுந்து குளித்து உணவருந்திவிட்டு 7 மணிக்கு வண்டியில் ஏறி 7¾, 8 மணிக்கு ஓட்டல் வந்து சேர்வார்கள். இவ்வாறு ஒரு இயந்திர சிறைச்சாலை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் பாவம் அவர்கள்!! இவ்வாழ்க்கை குறைந்தது 3 மாதத்திற்கு தொடரும்.
விடுமுறை
அவர்களுக்கு வார விடுமுறைக் கிடையாது!! சரி நீங்கள் கேட்கலாம் வீடு கட்டுமானம் போன்ற தொழில் செய்பவர்களுக்கும் விடுமுறைக் கிடையாதல்லவா என்று. ஆம் சரிதான் ஆனால் அவர்களுக்கு உடல் நிலைக்குறைவானால் விடுமுறைக் கிடைக்குமல்லவா, ஆனால் நர்த்தகிகளுக்கு அவ்வாறு கூட விடுமுறைக் கிடைக்காது. உடல் நலம் குறைவானாலும் அவர்கள் நாட்டியமாடச் செல்ல வேண்டும், வாடிக்கையாளர்கள் விரும்பினால் கட்டாயமாக ஆட வேண்டும். என்ன கொடுமை இது?
இப்போது துபாயில் குளிர்காலம் துவங்குகிறது. இது இங்கு உள்ளவர்களுக்குத் தெரியும். அதன் காரணமாக எனக்குத் தெரிந்த ஒரு நர்த்தகிக்கு நல்ல ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் தொடர் இருமல். இருந்தும் அவருக்கு விடுமுறை தரவில்லை!! அன்று அவரது வாடிக்கையாளர்கள் பலர் எதிர்பாராவிதமாய் வந்து மேலும் மேலும் தொடர்ந்து பல பாடல்களுக்கு ஆட வைத்து, பாவம் அவர் மிகவும் சோர்ந்து விட்டார்!! அன்று என்னை என் கைத்தொலைபேசியில் அழைத்து ஓ வென்று ஒரே அழுகை. அவர்களது நிலையைக் கேட்பாரில்லை!!
அதைவிடக் கொடுமை எனக்குத் தெரிந்த கேரளத்தைச் சேர்ந்த ஒரு பாடகிக்கு நடந்தது. அவருக்கு பயங்கரத் தொண்டை வேதனை. இருந்தும் அன்று பாருக்குச் சென்று நேயர் விருப்பத்திற்கினங்க 3 முதல் 4 பாடல்களை பாடினார்.
சில ஓட்டல்களில் சொல்ல முடியா கொடுமை
இங்கு நர்த்தகிகளுக்கு டோக்கன், மாலை, கிரீடம் அல்லது வளையல் போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக தருவார்கள். அதன் விலை 50 திர்காம் முதல் 100 திர்காம் வரை உள்ளது. உதாரணத்திற்கு ஒரு நாட்டியப் பெண்ணுக்கு ஒரு டோக்கன் கிடைத்தால் வாடிக்கையாளர் 50 திர்காம் தர வேண்டும். ஓட்டலுக்கு 20 முதல் 30 திர்காம் செல்லும் மீதமுள்ளது அப்பெண்ணுக்குச் செல்லும்.
சில வாடிக்கையாளர் ஒரு பெண்ணுக்கு 50 முதல் 100 டோக்கன் வரை கொடுப்பார்கள். அவ்வாறு கொடுத்தால் ஓட்டல் நிர்வாகிகள் அந்த வாடிக்கையாளருடன் அப்பெண்ணைச் செல்ல வற்புருத்துவது கொடுமையின் உச்சம். அவர்கள் நர்த்தகிகள் தவிர அப்படிப் பட்ட பெண்கள் கிடையாது. அவர்களும் குடும்பப் பெண்கள் தான். பாவம் வறுமை அல்லது வேறு பிரச்சனையின் காரணமாக இங்கு நாட்டியமாட வருகிறார்கள். எதிர்பாராவிதமாக வேறு பிரச்சனையில் சிக்கி விடுகிறார்கள்.
வேறு சில பார்களில் அந்த பார் மேலாளர் அவர்களை மிகவும் மட்டமாகவும் கேவலமாகவும் நடத்துவதை என் இரு கண்ணால் நானே பல முறை கண்டதுண்டு.
பெண்களின் அமைப்பு என்ன தூங்குகிறதா? பார் நர்த்தகிகள் திரைப்பட துணை நடிகைகள் போன்றோர் தான். ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு அமைப்பும் உதவ முன்வராதது மிகவும் வேதனைப் பட வைக்கிறது. அவர்களுக்கென எந்த ஒரு சங்கமும் கிடையாது. நமது அரசாங்கமாவது அவர்களுக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டும். அவர்களின் நிலைமாற வேண்டும்.
சட்டபூர்வமான எச்சரிக்கை:
மது அருந்துவது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கானது. இக்கட்டுரை மது அருந்துவதைத் தூண்டுவதாக இருந்தால் அதற்கு மிகவும் வருந்துகிறேன். இதன் நேக்கம் பார் நர்த்தகிகளுக்கு ஒரு விடிவுகாலம் வர வைப்பதேயாகும்.
Wednesday, December 5, 2007
பார் டான்ஸர்களின் அவலம்!!
எழுதிய பறவை
Senthil Alagu Perumal
at
12/05/2007 04:19:00 PM
7
comments
Links to this post
Subscribe to:
Posts (Atom)




